சென்னை:  தமிழகத்தில் “ஆணவ கொலைகளை தடுக்க அரசு  எடுத்த நடவடிக்கை என்ன?” என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏராளமான ஆணவக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்கும் வகையில், ஏற்கனவே நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது,  தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், துளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் வித்யாரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆணவக்கொலை தொடர்பாக  பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அவரது மனுவில், ஆணவக்கொலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும்,  அவ்வாறு அமல்படுத்தப்பட்டிருந்தால்,  ஆணவக் கொலைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியிருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஏற்கனவே ஆணவக்கொலை தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.