நாட்டின் கல்வி நிறுவனங்களிலேயே ஒரு தனித்துவமான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டு, தாராளமான நிதியாதாரங்களையும் பெற்று, உலகத்தரமான உள்கட்டமைப்புகள் மற்றும் அமைவிடச் சூழலையும் கொண்டுள்ள ஐஐடிகள் எனும் கல்வி நிறுவனங்களின் சாதனைகள் என்று வரும்போது, பல உலகத்தரமான தனித்துவக் கண்டுபிடிப்புகள் என்பதாகத்தானே இருக்க வேண்டும் என்பது சாமானியர்களும் கேட்கக்கூடிய கேள்வியே..!

ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாக, இக்கல்வி நிறுவனங்களின் சாதனைகளாக தொடர்ந்து வெளிவரும் செய்திகள் என்னவெனில், சாதியப் புறக்கணிப்புகள், இடஒதுக்கீட்டு எதிர்ப்பு, படித்து முடித்ததும் வெளிநாட்டிற்கு பறந்துசென்று அங்கு அந்நாட்டவர்கள் கண்டுபிடித்த ஃபார்முலாக்களில் வேலையாட்களாகப் பணியாற்றி பல லட்சங்களை சம்பளமாகப் பெற்று அங்கேயே நிரந்தரமாக குடியேறி விடுவது, எந்த சிறந்தக் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும் திறன்களோ அல்லது முயற்சிகளோ இல்லாதிருப்பது, இடஒதுக்கீடு மூலம் வந்த தகுதியான மாணாக்கர்களை அவமானப்படுத்தி புறக்கணிப்பு செய்து வெளியேற்றுவது, அவர்களில் பலரை தற்கொலைக்கு தள்ளுவது, பலரை மனஅழுத்த நோய்க்கு ஆளாக்குவது, பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டங்களின் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட கொடூரமான வன்முறைகள்தான் ஐஐடிகள் குறித்த சாதனைகளாக வெளிவரும் செய்திகளாக உள்ளன.

கடந்த 1990ம் ஆண்டு பாரதீய ஜனதா தயவில் பிரதமராக இருந்தபோதும், பல்முனை எதிர்ப்புகள் சூழ்ந்தபோதும், அப்போதைய பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாய் துணிச்சலுடன் அறிவித்தபோது, இந்த ஐஐடி அறிவாளிகள் செய்த வன்முறை உலகப் பிரபல்யம்!

வி.பி.சிங் ஆகட்டும், அதன்பிறகு அர்ஜூன் சிங் ஆகட்டும், அவர்களின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் நடைமுறைக்கு வந்ததாய் சொல்லப்பட்டாலும், ஆதிக்கவாதிகளின் இதயக்கனியாய் இருக்கும் ஐஐடிகளில், 27% ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இன்னும் எட்டாக்கனிதான்..!

பெரும்பான்மை சமூகத்தாருக்கான இடஒதுக்கீட்டை கடுமையான எதிர்க்கும் சிறுபான்மை ஆதிக்கவாதிகள், தங்களுக்கான 10% இடஒதுக்கீட்டை எந்தவித போராட்டமோ, உழைப்போ இல்லாமல் காவிகளின் ஆட்சியில் பெற்றுவிட்டது வேறு கதை..!

சரி, இடஒதுக்கீட்டால் ‍ஐஐடிகளின் தரம் மற்றும் சிந்தனை வளம் பாதிக்கப்படுகிறது என்று வாதிடும் ஐஐடி அறிவாளிகள், தங்களின் தகுதியான மூளை வளத்தை சிறப்பாகப் பயன்படுத்தி, அவ்வப்போது பல புதுமையான மற்றும் தனித்துவமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி இந்த சமூகத்திற்கு அளித்து வந்திருந்தால், அதை நினைத்தாவது ஆறுதல் அடைந்து அமைதியாக இருக்கலாம், நாம் எதற்காக அவர்களின் ஆற்றல் ஓட்டத்தின் போக்கில் இடையூறை ஏற்படுத்த வேண்டுமென்று..!

ஆனால், ‍வெகுமக்களின் வரிப்பணத்தை நன்றாக விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, வெளிநாட்டுக்காரர்களின் மூளையில் உதித்த ஃபார்முலாக்களுக்கு சேவகம் செய்ய பறந்து கொண்டிருப்பதே, தகுதிவாய்ந்த ஐஐடி அறிவாளிகளின்(பிறப்பிலேயே உரிமை பெற்றவர்கள்) வாடிக்கை எனும்போது, அதை வேடிக்கைப் பார்த்தே பொறுத்த பாதிக்கப்பட்ட உள்ளம், என்றைக்கேனும் வெள்ளமாகத்தானேச் செய்யும்..!

– மதுரை மாயாண்டி