ஹெல்சின்கி

ஃபின்லாந்து நாட்டில் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் அமைச்சர் சன்னா மரின் உலகின் மிக இளைய பிரதமர் ஆவார்

ஃபின்லாந்து நாட்டில் ஆண்டி ரின்னி கடந்த ஆறு மாதங்களாகப் பிரதமர் பதவி வகித்து வந்தார்.  அந்நாட்டில் தபால் துறை வேலை நிறுத்தத்தை இவர் சரிவரக் கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.   இதையொட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஃபின்லாந்து நாட்டில் தற்போது சோசியல் டெமாக்ரடிக் கட்சித் தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது

ஃபின்லாந்து நாட்டில் போக்குவரத்து அமைச்சராக பணி புரிந்தவர் 34 வயதான சன்னா மரின் ஆவார்.  இவரும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.   தற்போது  ஆட்சி செய்து வரும் கூட்டணிக் கட்சி பெண் அமைச்சர்களில் இவரும் ஒருவர் ஆவார்.  இவர்கள் அனைவரும் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆகும்.  இவர்கள் அனைவரும் பிரதமராகப் போட்டி இட்டனர்.  இதில் சன்னா மரின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது உலகில் 40 வயதுக்குக் குறைந்த பிரதமர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.   இதில் இதற்கு முன்பு நியுஜிலாந்தின் பெண் பிரதமரான ஜசிந்தா  ஆர்டர்ன் மிக இளைய பிரதமராக இருந்தார். தற்போது சன்னா மரின் உலகின் மிகவும் இளைய பிரதமராக உள்ளார்.  இவரும் ஜெசிந்தாவைப் போல் தற்போது ஒரு குழந்தையைப் பெற்றவர் ஆவார்.