இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வோடு ஒன்றிப்போன, ஒருங்கிணைந்த விவசாய முறையாக உள்ளது.

மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெருமளவு விவசாயிகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

குறைந்த மக்கள் தொகையும், விவசாயத்தையும் விவசாய உற்பத்தியையும் வியாபார நோக்கில் அணுகும் மேற்கத்திய பணக்கார நாடுகளில் இந்தியாவை விட அதிக எண்ணிக்கையிலான பால் பண்ணைகள் புற்றீசல் போல் பெருகி இருக்கிறது.

இங்குள்ள பால் பண்ணைகளில், ஊசி மூலம் பசுக்களை சினையுரச் செய்து பால் உற்பத்தியை அதிகரிக்கின்றனர்.

கன்றை ஈந்த பசுக்களிடம் இருந்து ஓரிரு நாட்களிலேயே அந்த கன்றை தாயிடம் இருந்து பிரிப்பதோடு, கன்றுக்கு அதற்குண்டான தாய்ப்பால் கிடைக்காமல் செய்கின்றனர்.

பிறந்த கன்று பெண் கன்றாக இருந்தால், அதனை ஓரிரு ஆண்டுகள் வளர்த்து அவற்றை சினையுரச் செய்து பால் உற்பத்தியைப் பெருக்குகின்றனர்.

 

அதே, ஆண் கன்றாக இருந்தால், அதை வளர்த்து மாட்டிறைச்சி ஆகவோ, அல்லது இளம் கன்றிலேயே மாமிசமாகவோ விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

நான்கு அல்லது ஐந்து கன்றுகளை ஈன்ற பின் பசுக்களையும் இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பி பணம் பார்க்கும் இந்த பால் பண்ணைகள், பசுவதை கூடங்களாகவும் செயற்கை முறையில் இயங்கும் மிருகவதைக் கூடங்களாகவும் மாறிவருகின்றன என்று மேற்கத்திய மிருகவதை எதிர்ப்பாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

உயிரினங்களை இதுபோன்று வதை செய்வதைத் தடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் பலவற்றில் வீகன் எனப்படும் தாவர உணவியல் முறை பிரபலமாகி வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், வீகன் உணவகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறைச்சிக்குப் பதிலாக சோயாவில் செய்யப்பட்ட உணவு வகைகளுக்கும், பாலுக்கு பதிலாக ஓட்ஸ் மில்க், ராகி மில்க், தேங்காய் பால் என்றும் தயிருக்கு பதிலாக பீஸ் மில்க் கர்ட், கோகொனட் மில்க் கர்ட் என்றும் பன்னீருக்கு பதிலாக ‘டோபு’வுக்கும், பலாக்கா பிரியாணி, மீல்மேக்கர் மீன் வகைகள் என்று அனைத்திலும் தாவரத்திற்கு மாறிவருவது இதுபோன்ற மிருகவதைக் கூடங்களுக்கு மூக்கணாங்கயிறு போடுவது போல் உள்ளது.