சென்னை: இந்திய அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போட்டி சம்பளத்தில் 80% அபராதமாக விதிக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி, தான் பந்துவீசியபோது நிர்ணயித்த நேரத்தில் வீசியிருக்க வேண்டிய ஓவர்களைவிட குறைவாகவே பந்து வீசியிருந்தது. அதாவது 4 ஓவர்கள் அந்த அணி குறைவாக வீசியிருந்தது.

எனவே, இதுகுறித்து கள நடுவர்கள், ஐசிசி அமைப்பின் ‘‍மேட்சி ரெஃப்ரி’ யிடம் புகார் தெரிவித்தனர். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

பொதுவாக, விதிப்படி, 1 ஓவர் தாமதத்திற்கு 20% அபராதமாக விதிக்கப்படும். ஆனால், இந்தப் போட்டியில் மொத்தமாக 4 ஓவர்கள் பற்றாக்குறை நிலவியதால் மொத்தமாக கணக்கிடப்பட்டு 80% அபராதம் விதிக்கப்பட்டது.