கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த சுவெந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சி மக்களிடம் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமிழந்து குட்டிக் கட்சிகளாக மாறி விட்டன. பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு விசிட் செய்து அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார்.

அதில் ஒன்றாக திரிணாமுல் கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களை பாஜக வளைத்து வருகிறது. இந்நிலையில், திரிணாமுல் கட்சியின் முக்கியப் பிரமுகரும், ஒரு காலத்தில் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு விசுவாசியாகவும் இருந்து வந்த சுவெந்து அதிகாரி தற்போது மம்தாவிடம் சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அவர் போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். ஹுக்ளி ஆற்று பாலங்கள் வாரியத் தலைவராகவும் இருந்தார். மேலும், திரிணாமுல் கட்சியில் பல மாவட்டங்களுக்கு மேற்பார்வையாளராக இருந்தார். தேர்தலை சந்திக்கும் பொருட்டு கட்சியில் சில மாற்றங்களை மம்தா செய்து வருகிறார். அதன்படி, சுவெந்துவிடம் இருந்து மாவட்டப் பொறுப்பு பதவி பறிக்கப்பட்டது. இதனால், கடும் அதிருப்தியில் உள்ள அவர் கடந்த 2 நாள் முன்பாக வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக கல்யாண் பானர்ஜியை வாரியத் தலைவராக முதல்வர் மம்தா நியமித்தார்.

இதைத் தொடர்ந்து, சுவெந்து அதிகாரி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினமா கடிதத்தை முதல்வர் மம்தா உடனடியாக கவர்னர் ஜெகதீப் தங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து சுவெந்து அதிகாரியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சுவெந்துவின் ஆதரவாளர்கள், கட்சித் தலைமைக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். எனவே, சுவெந்துவை பாஜக வளைப்பதாக கூறப்படும் தகவல் நம்பும்படியாக உள்ளது. பாஜகவுக்கு சுவெந்து சென்றால், அது திரிணாமுல் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.