டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

8 கட்டங்களாக மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மமதா பானர்ஜி தொகுதியில் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன்னர், அங்கு அவர் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார்.

கூட்டத்தில், சிலர் தம்மை கீழே தள்ளி தாக்கியதாகவும், கால் மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்னர் மமதா பானர்ஜி, நேற்று முன்தினம், வீடு திரும்பினார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய  தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த வாரம் நந்திகிராமில் மமதா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தாக்குதல் காரணமாக அவ்வாறு காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.