டெல்லி: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்துக்கு வரவேண்டிய ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை நிதி விடுவிப்பது தொடர்பாக பிரதமர் மோடியை வரும் 20ந்தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்திற்கு தர வேண்டிய  மத்திய நிதியை விடுவிக்கக் கோரி, முதல்வர் மம்தா பானர்ஜி டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இதை மேற்குவங்க மாநில உயர் அதிகாரி  உறுதி செய்துள்ளார்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை பாக்கியை செலுத்த வேண்டும் என மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,  எந்த மாநிலத்திற்கும் ஜி.எஸ்.டி பாக்கி நிலுவையில் இல்லை என்று கூறியதுடன், “ஜி.எஸ்.டி தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம். அதை அனுப்பாவிட்டால் ஜி.எஸ்.டி,யை விடுவிக்க முடியாது என தெரிவித்ததுடன்,  கர்நாடகா, மேற்குவங்கம் இந்த சான்றிதழை இதுவரை அனுப்பவில்லை” என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், மத்தியஅரசு நிதியை விடுவிக்க வலியுறுத்தி, மேற்கு வங்க முதல்வர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.  இதுதொடர்பாக அவர் அனுமதி கோரியிருந்த நிலையில், மோடியுடன் சந்திப்புக்கான பானர்ஜியின் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) ஏற்றுக்கொண்டுள்ளது  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி மம்தா பானர்ஜி,  “டிசம்பர் 20 ஆம் தேதி காலை 11 மணியளவில்  பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளத.

100 நாட்கள் வேலை உட்பட பல்வேறு கணக்குகளில் மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளதாக இந்த வார தொடக்கத்தில் பானர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.