டெல்லி:   பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்து பேசினார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பிரதமர் மோடியையும் முதல்வர் மம்தா கடுமையாக சாடினார். தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியை பொய்யர் என விமர்சித்த அவர், “நான் பிரதமர் பதவியை மிகவும் மதிக்கிறேன். ஆனால் பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. இன்று, பாஜக சித்ரவதை காரணமாக, உ.பி.யில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் வேலையை விட்டு வெளியேறி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார். வங்காள கலாச்சாரத்தை அழிக்க பாஜக உத்தரபிரதேசத்திலிருந்து குண்டர்களை அழைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிகாசஸ் விவகாரம் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தன்னிச்சையாகவே, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டபிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தின் நிதி நெருக்கடி சூழலை போக்கும் வண்ணம், மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய மம்தா, பெகாசஸ் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் அழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் விசாரணை இருக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக இன்று காலை டெல்லி வந்த மம்தா,  காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தை சந்தித்து பேசினார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் முகாமிடும் அவர்,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.