சென்னை,

நீட் விவகாரம் முடிந்துபோனது என்று கூறிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, தமிழகத்தில் நடைபெற்று வரும் மாணவர்களின் தீவிர போராட்டம் காரணமாக தனது நிலையை மாற்றி உள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு வாயிலாக மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இந்த நீட் தேர்வானது மத்திய கல்வி பாடத்திட்டத்தில் இருப்பதால், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் கையாலாத தனத்தாலும், மத்திய அரசின் வஞ்சகத்தாலும், சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆண்டு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக மாணவி அனிதா பிளஸ்2 பரிட்சையில் 1176 மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் தேர்ச்சியடையாத காரணத்தால், தனது மருத்துவ கனவு தகர்ந்தால், தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாணவர்கள் போராட்டமும் சூடுபிடித்து உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்று இறுதி வரை கூறி வந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, சமீபத்தில் நீட் முடிந்துபோன விவகாரம் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால், நீட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் கிளர்ந்தெழுந்துளளதால், தற்போது தனது நிலையை மாற்றி உள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு  விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கால்கோள் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்பிதுரை, செய்தியாளர்களிடம் கூறும்போது இந்த தகவலை கூறினார்.

மேலும், அ திமுகவில் பிளவு என்பதே கிடையாது என்றும், தற்போது கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டுள்ளது என்றும், அந்த  கருத்து வேறுபாட்டை நீக்க முதலமைச்சர் முயற்சி செய்து வருவதாகவும், அதிமுக உட்கட்சிப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.