கரூர்:  தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியிடுவேன் என காங்.,-எம்.பி. ஜோதிமணி அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக அரசுக்கு எதிராக டிஎம்கே பைல்ஸ்1, டிஎம்கே பைல்ஸ்2 மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர்மீது ஊழல் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இந்த ஊழல் பட்டியல்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், மத்தியஅரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவைகள் மறைமுகமாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது சோதனைகளையும் நடத்தி வருகிறது.

தற்போது அண்ணாமலையின்  என் மண் என் மக்கள்  நடைபயணம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.  அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும், அந்த தொகுதி எம்.பியான  ஜோதிமணி கடுமையாக விமர்சனம் செய்ததுடன்,  எம்.பி ஜோதிமணி கரூருக்கு செய்த மக்கள் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பேசினார்.

இதற்கு பதில் கூறிய ஜோதிமணி, “அண்ணாமலையின் யாத்திரை தோல்வியடைந்துள்ளது. அண்ணாமலையின் யாத்திரை வசூலுக்காக நடைபெறுகிறது. ராகுல் காந்தி இந்தியா முழுவதும் 3,500 கிலோமீட்டர் யாத்திரை மேற்கொண்டார். தினசரி 23 கிலோமீட்டர் நடந்தோம். யாரையாவது மிரட்டி யாத்திரைக்காக பணம் வாங்கினோம் என குற்றம்சாட்டமுடியுமா?

மணல் மாபியாக்களிடமிருந்து பாஜக அலுவலகம் மாதம் 60 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை அமலாக்கத்துறை வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

2 ஆண்டுகள் எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 7,500 கோடியில் மத்திய அரசு செய்த ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கரூரில் உள்ள அண்ணாமலையின் உறவினர்கள் சொத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அண்ணாமலையின் யாத்திரை ஷூட்டிங் மற்றும் வசூலுக்கானது. பொய்யையும் அண்ணாமலையையும், பொய்யையும் மோடியையும், பாஜகவையும் பிரிக்க முடியாது” என்றார்.

இந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தில் நடைபயணம் செய்து வரும் அண்ணாமலை,  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் எம்.பி. ஜோதிமணி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அண்ணாமலை,.

தமிழகத்தில் பா.ஜ., நேரடியாக அதிகாரத்தில் இல்லை. மத்திய அரசாங்கத்தால் எதை எதை செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக் கிறோம். மற்ற பிரச்னைகளுக்கு மக்கள் சார்பாக நாங்கள் போராடுகிறோம். தமிழக போலீஸ் துறையின் கவனம் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை; சிதறிப் போய் விட்டது. அமைச்சர்கள் உதயநிதி சேகர் பாபு ஆகியோர் மீது தமிழக போலீஸ் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தவறு, என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.  தி.மு.க., ஆட்சியில் தமிழக போலீஸ் துறை நடுநிலை தவறி விட்டது.

தி.மு.க., உத்தரவுப்படி பா.ஜ., கட்சிக்காரர்களை கைது செய்வது மட்டுமே தமிழக போலீசின் குறிக்கோளாக உள்ளது. பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுப்பது தவறாகி விடும். பஸ்சில் மாணவர்கள் தொங்கிச் சென்றதை பார்த்த பா.ஜ., கட்சியை சேர்ந்த சகோதரி கேள்வி கேட்டதை தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால், அடித்திருக்கக் கூடாது.

ஆர்.எஸ்.பாரதி பேசியதை விட ஒரு சமுதாயத்தை கேவலமாக மோசமாக யாரும் பேசமுடியாது. கடந்த 30 மாதங்கமாக அவர் அப்படித்தான் பேசுகிறார். ரோட்டில் செல்லும் பொறுக்கி கூட அந்த மாதிரி பேச மாட்டான். தி.மு.க.,வின் சொத்தே ஆபாசமாக பேசுவது தான்.

நாகலாந்து மக்கள் புகார் கொடுத்து, அங்குள்ள போலீசார் அவரை கைது செய்வதற்கு முன் தமிழக போலீஸ் கைது செய்ய வேண்டும்.

பா.ஜ., கட்சியினர் தினமும் கூட்டம் கூட்டுவது போல் காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்ட முடியுமா என கேள்வி எழுப்பியவர், காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் தான் அதிகம் உள்ளனர். அங்கு வேலை இல்லாததால் தான் ஜோதிமணி என்னை பற்றி  பேசியிருக்கிறார்.

பெண்கள் மீது கண்ணியம் கட்டும் நான் தரம் குறைந்த விமர்சனம் செய்யும் ஜோதிமணியை பற்றி தவறாக பேச விரும்பவில்லை. ராகுலும் ஜோதிமணியும் சேர்ந்து கர்நாடகாவில் வசூல் வேட்டை நடத்தினர் என்று சொன்னால் தவறாக போய் விடும். தேர்தலின் போது, ஜோதிமணிக்கு, சிவக்குமார் தான் பணம் அனுப்பினார். அதற்கான ஆதாரம் உள்ளது. பெண் என்பதால் விட்டு வைக்கிறேன்; பிழைத்துப் போகட்டும் என்றார். 

அண்ணாமலையின் பேச்சுக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ள கரூர் எம்.பி. ஜோதிமணி,  நான் பெண் என்பதால் பிழைத்து போகட்டும் என விட்டிருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார்? என கோபத்துடன் கேள்வி எழுப்பியவர், ”கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரிடம், நான் பணம் வாங்கிய ஆதாரம் இருந்தால், அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலை சொத்து மதிப்பு குறித்து, அவசியம் ஏற்பட்டால் வெளியிடுவேன் என தெரிவித்தார்.

மேலும், அண்ணாமலையால் என்ன செய்ய முடியும். அமலாக்கத்துறை என்ற வேட்டை நாயை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், பா.ஜ.,வினர் ஏவி கொண்டுள்ளனர். முடிந்தால் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பட்டும். என் வீட்டில் கஞ்சி போட்ட காட்டன் சேலைகளை தவிர, எடுக்க ஒன்றும் இல்லை.

மணல் மாபியாக்களிடம் பணம் வாங்கி, அண்ணாமலை போல ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை. வீட்டுக்கு, 3.70 லட்சம் ரூபாய் வாடகை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் சொல்லவில்லை. அவரை போல, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை நான்.

பெண்கள் மீது தனிப்பட்ட முறையில், கழிச்சடை அரசியல் நடத்துகிற அரசியல்வாதி தான் அண்ணாமலை. கர்நாடகா மாநில காவல் துறையில் இருந்த கருப்பு ஆடு அவர்.

கடந்த, 2018ல் கர்நாடகா மாநில தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை. தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜ., சார்பில் எடியூரப்பா, மூன்று நாள் முதல்வராக இருந்தார். அப்போது சிக்மக்ளூரில் எஸ்.பி.,யாக இருந்த அண்ணாமலை, எடியூரப்பா அரசை காப்பாற்ற ராம் நகருக்கு மாற்றப்பட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த, காங்., – எம்.எல்.ஏ.,க்களை, பணம் வாங்கி கொண்டு வளைத்து போட அனுப்பப்பட்டவர் தான் அண்ணாமலை. அந்த முயற்சி தோல்வி அடைந்த போது, மீண்டும் சிக்மக்ளூருக்கு சென்று, பெங்களூருக்கு சென்றவர் அண்ணாமலை.

பின், காங்., ஆட்சி அமைந்தபிறகு, அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அண்ணாமலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர் பதவி கிடைத்தது. மணல் மாபியாக்களிடம், 60 லட்சம் ரூபாய் வாங்கியதாக சென்னை, பா.ஜ., அலுவலகத்தில் வேலை செய்தவர் வீட்டுக்கு அமலாக்கத்துறை சென்றது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்காமல், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏன் சென்றனர் என்பதற்கு பதில் இல்லை.

அரசு பதவியில் எதிலும் இல்லாமல் உள்ள அண்ணாமலைக்கு வழங்கப்படும் உயர்ந்தபட்ச இசட் பிரிவு பாதுகாப்பு காரணமாக, ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை செலவாகிறது. எம்.பி., என்ற முறையில் நான் விமானத்தில் முதல் வகுப்பில் கூட செல்வது இல்லை. இவர் எப்படி என்னை கேள்வி கேட்கலாம். மத்தியில் காங்.,கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அண்ணா மலையின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும். அப்போது, அவர் இருக்க வேண்டிய இடம் வேறாக இருக்கும். அண்ணாமலை ஒரு வசூல் ராஜாவாக வலம் வருகிறார்.

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரிடம், நான் பணம் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால், அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலை சொத்து மதிப்பு குறித்து, அவசியம் ஏற்பட்டால் வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.