சென்னை:

ந்திய பிரதமர்  மோடி சீன பிரதமர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், அவர்களை வரவேற்று பேனர் வைக்க தமிழகஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி கோரியிருந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறின்றி பேனர்  வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தில், வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பகுதி முழுவதும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா வரும் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்று பதாகை வைக்க அனுமதி கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. தமிழகஅரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது என்றும், பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் மனு அளித்துள்ளது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  வெளிநாட்டு பிரமுகர்கள் அடிக்கடி புதுடில்லிக்கு வருகிறார்கள், அவர்கள் அங்கு பதாகைகளை அமைக்கிறார்களா?  என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பேனர் பிரிண்டர்ஸ் சங்கம் தரப்பு வழக்கறிஞர் ஞானதேசிகன்,  டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து வாதாடிய திமுக வழக்கறிஞர், பதாகைகளை அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் அரசு அனுமதி பெற வேண்டும், அரசு  நீதிமன்றத்தை அணுகியதில் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதாக திமுக தரப்பு கூறியது.

தாங்கள் மோடி, ஜின்பிங்  நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும்,  விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதே திமுக வாதம் சீனாவிற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளது என்றும் திமுக தரப்பு வாதிட்டது.

அதற்கு பதில் அளித்த  தமிழக அரசு வழக்கறிஞர், பேனர் வைப்பது தொடர்பாக  நீதிமன்றத்திற்கு தெரிவிக்க மட்டுமே தமிழகஅரசு  விரும்புவதாகவும், பேனர் தொடர்பான உத்தரவுகள் அரசியல் கட்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தியதால் உண்மையில் அரசு  அனுமதிபெறத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து நிபந்தனைகளுடன் பிரதமர் மோடி-சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பேனர்களை பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வைக்க வேண்டும் என  அறிவுறுத்தியதுடன், அரசு சார்பில் பேனர் வைக்க மட்டுமே அனுமதி வழங்குவதாகவும், அரசியல் கட்சிகள் சார்பில் பேனர் வைக்க அனுமதியில்லை என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

பொதுமக்களுக்கு இடையூறின்றி சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சாலைகளில் வரவேற்பு பதாகைகளை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.