சென்னை: வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரவிடுமுறையை யொட்டி, பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 05/03/2026 (வியாழக்கிழமை), 06/03/2026 (வெள்ளிக்கிழமை). 07/03/2026 (சனிக்கிழமை) மற்றும் 08/03/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மாதவரத்திலிருந்து இன்று (06/03/2026 மற்றும் 07/03/2026) நாளை 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளும், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி. கும்பகோணம். மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (06/03/2026 வெள்ளிக்கிழமை) 310 பேருந்துகளும், நாளை ( 07/03/2026 சனிக்கிழமை) 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (06/03/2026 வெள்ளிக்கிழமை) 55 பேருந்துகளும், நாளை ( 07/03/2026 சனிக்கிழமை) 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.