நெல்லை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துகள் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். பாஜகவில் தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பை அடையவும், அவர்களின் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்கள் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டு உள்ளது. சந்தைப்படுத்துதலில் விவசாயிகள் நஷ்டப்படுவதை தடுக்கவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இடைத்தரகர்களை ஒழிக்கவேண்டும், விவசாயிகள் விரும்பும் தொகையை அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். விவசாயம் செய்யும் முன்பே அவர்கள் பொருளுக்கான விலையை உருவாக்கும் திட்டங்கள் இந்த சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது.

வேளாண் சட்டங்களை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இந்த சட்டம் குறித்து விளக்கமளித்தாலும் ஏற்க மறுக்கிறார்கள் என்றார்.