சென்னை:

காவிரி வாரியம் அமைப்பது  தொடர்பாக வரும் 29ம் தேதி வரை பொறுத்திருப்போம் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டசபை பட்ஜெட் கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று தொடங்கியது. இன்று காலை கூட்டம் தொடங்கியதும், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இன்று பாராளுமன்றத்தில், மத்திய அரசு மீது தெலுங்குதேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக அதிமுகவும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், காவிரி நதி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புபடி இந்த மாதம் 30ந்தேதி வரை கால அவகாசம் இருப்பதாகவும், அதன் காரணமாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 29ந்தேதி வரை அவகாசம் இருப்பதால், அதுவரை பொறுத்திருப்போம் என்றும், அதற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் அனைவரும் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம்.

இவ்வாறு அவர்  கூறினார்.