சென்னை:
தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து உள்ளர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம், தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, தமிழகத்தில் இரு மொழி கொள்கையையே, அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று கூறிய முதல்வர் எடப்பாடி, புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை இடம்பெற்று இருந்தாலும், ஜெ., அரசு, மும்மொழி கொள்கையை, தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்காது. இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே, தொடர்ந்து பின்பற்றும். தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த, மும்மொழி கொள்கையை மறு பரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படுத்திக் கொள்ள, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும், புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து ஆராய 2 நிபுணர் குழுக்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த தமிழகஅரசின் முடிவுக்கு தமிழக பாஜக தலைவல் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தி ருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் மொழி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்றுக்கொள்வதை அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் நயினார் நாகேந்திரன் குறித்த கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள், அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.