மக்களவை தேர்தலில், மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் பா.ம.க,பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.. இதில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

இந்த தேர்தலில் தி.மு.கவுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. மத்தியில் யார் ஆள வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதே மக்கள் தமிழகத்தில் அ.தி.மு.க தான் ஆள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க வெற்றிப் பெற்றால் ஆடம்பரமாக கொண்டோடுவதோ, தோல்வி அடைந்தால் சோர்ந்து விடுவதோ இல்லை. வெளிப்படையாக சொல்கிறேன், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்த தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததின் விளைவாக ஒரு சமுதாயத்தின் வாக்குகளை குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம். மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1.40 லட்சம் வாக்குகள் சிறுபான்மையினர் வாக்குகள். அதனை அப்படியே இழந்து விட்டோம். இதனால் வெற்றி அவர்களுக்கு சாதகமாகி விட்டது. கூட்டணியில் செய்த தவறை திருத்திக் கொள்கிறோம். அ.தி.மு.க எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும். தி.மு.கவில் வெற்றி பெற்ற பலர் வழக்குகளில் உள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் இடமிருக்கிறது. தி.மு.க கூட்டணி 38 எம்.பி.க்களை பெற்றுள்ளது, எங்களை அவர்கள் கேட்டதை போல் இப்போது நாங்கள் கேட்போம் தமிழகத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று.

2001 – 2006 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதிப்பு கூட்டு வரியை துணிச்சலோடு எதிர்த்தவர் அம்மா. இன்றைக்கு அது ஜி.எஸ்.டி.யாக உள்ளது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி. பொய்யை சொல்லி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று தி.மு.க. கனவு காண்பது ஒருபோதும் நிறைவேறாது” என்று தெரிவித்தார்.