விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜக-வில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறினார்.

மேலும், அவர் அங்காவது சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்ததோடு காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பைப் பெற்ற விஜயதரணி தனது தேவை குறித்து சட்டமன்ற குழு தலைவரிடமோ அல்லது அகில இந்திய தலைமையிடமோ விவாதிக்கலாம் கட்சியில் இருந்து வெளியேறியது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி வெளியேறியதை விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிப்பு கொடுத்து கொண்டாடிய நிலையில் விஜயதரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர்.

முன்னதாக விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சரும் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினருமான எல். முருகன் தலைமையில் பாஜக கட்சியில் இணைந்தார்.