சென்னை: தேர்தலில் எடப்பாடியை ஆதரித்து ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோ வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி தொடர்பாக  வதந்திகள் பரப்பப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பிரச்சார முன்னோட்டங்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஜெயலலிதா பேசும் பரப்புரை வீடியோவையும் வெளியிட்டார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசுவது போன்ற வாசகங்கள்  இடம்பெற்றுள்ளன.

அதில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளான தாலிக்கு தங்கம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய சாதனைகளுக்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஆதரித்தார்கள். மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தில் ஆளும் அரசும் தமிழக நலனுக்கு எதிராக உள்ளனர். எனவே தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். மக்களாலே நாம் மக்களுக்காகவே நாம். இவ்வாறு ஜெயலலிதா பேசியது போன்று ஆடியோ வெளியிடப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என்றும், கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டு மென்றே வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தபின், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்பாட்டில் தயாரான 76 கிலோ கேக் வெட்டப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.