12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு! கே.சி.வேணுகோபால்,

Must read

டெல்லி: 12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு செய்வதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான  கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நேற்று (நவம்பர் 29ந்தேதி)  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்றைய முதல்நாள் கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதமின்றி  எதிர்க்கட்சி களின் அமளிகளுக்கு இடையே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கடந்த  மழைக்கால கூட்டத்தொடரில் கன்னியக்குறைவாக நடந்துகொண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், இந்த  குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுத்து ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய எம்.பி.க்கள்  இன்று காலை மாநிலங்களவை  தொடங்கியவுடன் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “12 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி உங்கள் அலுவலகத்துக்கு வந்தோம். இந்த சம்பவம் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது. அதற்கு இப்போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குபதில் அளித்த ராஜ்யசபா தலைவர் வெங்கைய நாயுடு, “கடந்த மழைக்கால அமர்வின் கசப்பான அனுபவம் இன்னும் நம்மில் பெரும்பாலோரை ஆட்டிப்படைக்கிறது. ஆகையால், இடைநீக்கத்தை திரும்பப் பெற இயலாது” என்றார்.

இதையடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள  காந்தி சிலை முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் 12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு செய்கிறோம் என தெரிவித்தார்.

இதுகுறித்து ரிணாமுல் காங்கிரஸ் எம்பி நதிமுல் ஹக் கூறும்போது,  எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு நாங்கள் எதிரானவர்கள். நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிற்கிறோம், ஆனால் நாங்கள் எங்கள் வழியில் செல்வோம் என்று தெரிவித்தார்.

More articles

Latest article