புதுடெல்லி:

அமர்ந்திருக்கும் போதுதான் வழக்கறிஞர்களிடம் பேசுவோம், நின்று கொண்டு பேசமாட்டோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

அலிகார் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்ட வழக்கு குறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் ஏதோ பேச முற்பட்டார் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்.

அப்போது மதிய உணவுக்கு தலைமை நீதிபதி புறப்பட்டுக் கொண்டிருந்தார். உணவு இடைவேளைக்குப் பின் வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நான் புறப்பட்டபோது ஏதோ சொன்னீர்களே என்று கேட்டார்.

வழக்கு விசயமாக சொல்ல வந்தேன். நீங்கள் புறப்பட்டுவீட்டீர்கள் என மூத்த வழக்கறிஞர் தவான் கூறினார்.

அப்போது பதில் அளித்த தலைமை நீதிபதி கோகாய், நீங்கள் ஏதோ கேட்க வரும் முன்பே நாங்கள் எழுந்துவிட்டோம். வழக்கறிஞர்களிடம் நின்று கொண்டு நீதிபதிகள் பேசக் கூடாது. அமர்ந்துதான் பேச வேண்டும். எழுந்தபின் நீதிபதிகளிடம் பேச முற்படுவது சரியல்ல என்றார்.

இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் தவான், இது சரியா, தவறா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு தலைமை நீதிபதிக்கும் தனித்தனி அணுகுமுறை உள்ளது என்றார்.

இதன்பின்னர், அலிகார் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணையை, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வேண்டுகோளை ஏற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் தள்ளிவைத்தது.