டில்லி

மோடி ரூ. 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்னதை மறுத்ததை போல் அமிஷாவும் ராபர்ட் வதேரா பற்றி தாம் கூறியதை மறுத்துள்ளார்.

கடந்த தேர்தலின் போது மோடி வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிப்பேன் என சொன்னதாக தகவல்கள் வெளியாகின.    பல பொதுமக்கள் அதற்காகவே அவருக்கு வாக்களித்தனர்.  அதன் பிறகு மோடி அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கு என்னும் திட்டத்தை கொண்டு வந்தார்.

அப்போது மக்கள் அவர் வங்கிக் கணக்கு தொடங்க சொல்வதே ரூ.15 லட்சத்தை செலுத்த என நம்பத் தொடங்கினர்.   அதன் பிறகு மோடி” நான் அனைவருக்கும் ரூ.15 லட்சம் அளிப்பேன் என சொல்லவில்லை.   வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கொண்டு வந்தால் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தும் அளவுக்கு இருக்கும் என் சொன்னேன்” என தெரிவித்தார்.

மோடி பொய் சொல்லி மக்களை ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட தொடங்கினர்.   அது மட்டும் இன்றி பாஜக பொய் சொல்லி ஏமாற்றும் கட்சி என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.   இந்த குற்றச்சாட்டு தற்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதும் வர தொடங்கி உள்ளது.

அமித் ஷா முன்பு, “பல பாஜக தலைவர்கள் சோனியா காந்தியின் மருமகன் ரபர்ட் வதேரா நில ஊழல்களிலும் மற்றும் பணமோசடிகளிலும் மாட்டிக் கொண்டுள்ளதை காங்கிரஸ் அரசு மறைத்து வருவதாக சொல்கிறார்கள்.   பாஜக ஆட்சிக்கு வந்ததும் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப் படுவார்” என தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அமித்ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், “நாங்கள் ராபர்ட் வதேரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என சொல்லவில்லை.   ஊழல் செய்பவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று தான் சொன்னோம்.  ராபர்ட் வதேரா மீது ஊழல் புகார் உள்ளதாக சொன்னோம்.   இரண்டும் வெவ்வேறானது.   அதை தேவை இல்லாமல் ஒன்று படுத்தி செய்தியாக்கி உள்ளனர்.

நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை.  அதுதான் காங்கிரசுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.   நாங்கள் பல்வேறு அடுக்கு விசாரணைக்கு பிறகு விசாரணை அமைப்பு வதேரா மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யும் என்பதில் இப்போதும் உறுதியாக உள்ளோம்.  வரும் மக்களவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைத்த பிறகு ராபர்ட் வதேரா மீதான விசாரணை மீண்டும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சிகள் மோடியைப் போலவே அமித்ஷாவும் பல்டி அடித்து வருவதாக கிண்டல் செய்து வருகின்றனர்.