தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக திரட்டிய பல்லலாயிரம் கோடி ரூபாய் நிதி எங்கு சென்றது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆளுநர், மத்திய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சிலரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக நிர்பந்தித்துள்ள நிலையில் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிடாமல் சொகுசான பதவியில் அமர்ந்துகொண்டு பாஜக தொண்டர்கள் முதுகில் ஏறி சவாரி செய்வதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சால்ஜாப்பு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரின் செலவு உச்சவரம்பு 96 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 2022 ராஜ்ய சபா தேர்தலின் போது 2.5 கோடி ரூபாய் சொத்துமதிப்பு காட்டிய நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதேவேளையில், தேர்தல் பத்திரம் மூலம் பாஜக திரட்டிய பல்லலாயிரம் கோடி ரூபாய் நிதி எங்கு சென்றது ? என்றும் வேண்டுமானால் நிர்மலா சீதாராமன் பெயரில் தேர்தல் நிதி திரட்ட நாங்கள் தயார் போட்டியிட நீங்கள் தயாரா ? என்றும் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்படியே போட்டியிட்டாலும் தனது வைப்புத் தொகையை திரும்பப்பெறும் அளவுக்காவது அவர் வாக்குகளை பெறுவாரா என்றும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.