பெரம்பலூர்: அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, நாங்கள் பாஜகவுக்கு அடிமையாக இருக்கவில்லை, இனக்கமாவே இருக்கிறோம் என்றவர், திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் என கடுமையாக விமர்சித்தார்.
நடைபெற உள்ள தேர்தலில் இரட்டை இலைக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று பேசியவர். இந்த தேர்தலுடன் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றதர்.மக்களவைத் தேர்தலின்போது ஸ்டாலின் பல பொய்களை கூறி வெற்றி பெற்றார். ஆனால் தற்போது மக்கள் விவரமாக உள்ளனர்.
அதிமுக, பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார், ஆனால், அதிமுக அரசு தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வரவே பாஜக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறது இது அடிமை கிடையாது என்று விளக்கம் அளித்தவர், நான் விவசாயப் பணியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறேன். எனக்கு நீங்கள் தந்ததுதான் முதல்வர் பதவி, திமுக. 10 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தும் திமுக திருந்தவில்லை. எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என நினைக்கிறார், முதல்வர் கனவில் மிதக்கிறார்.. ஆனால் அவர் கனவு பலிக்காது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். கள்ளக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”பிரியாணி, புராட்டோ சாப்பிட்டுவிட்டு திமுகவினர் குண்டு குண்டாக இருப்பார்கள். ஓட்டல்களில் பிரியாணி, புரோட்டா சாப்பிட்டுவிட்டு காசு தராமல் திமுகவினர் சென்றுவிடுவார்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர்.
ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பார்த்து நான் விவசாயி இல்லை, போலி விவசாயி என்று பிரசாரம் செய்கிறார். எனது தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நானும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளில் எப்படி போலி விவசாயி இருக்கமுடியும்.
தி.மு.க. ஆட்சியின்போது உள்ளாட்சிதுறையில் எந்த விருதாவது பெற்றுள்ளீர்களா? தி.மு.க.வினருக்கு கொள்ளையடிப்பதுதான் குறிக்கோளாக உள்ளது. கருணாநிதி முதல்-அமைச்சரான பிறகுதான் தமிழகத்தில் ஊழல் பெருத்துவிட்டது. அதற்கு முன்பு தமிழகத்தில் ஊழல் கிடையாது. ஊழல் பெருத்த கட்சி தி.மு.க.தான். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. என பொதுமக்களிடம் பொய் பிரசாரம் செய்து மக்களை குழப்பி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார்.
தி.மு.க. கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. தற்போது அவர்கள் கோர பசியில் உள்ளனர். ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்வார்களா? என்று நீங்கள் எண்ணிபார்க்க வேண்டும். தி.மு.க.வினர் காவல்துறையை மிரட்டுகின்றனர். ஸ்டாலினின் மகனான உயதநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். வந்தால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியுமா? என காவல்துறையை எச்சரிக்கிறார்.
காவல்துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் நிலை என்னவாகும். தி.மு.க. அராஜக கட்சி. அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது. தி.மு.க.வில் உள்ளவர்கள் குண்டர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஓட்டல்களில் சென்று பிரியாணி, பரோட்டா ஆகியவை சாப்பிட்டுவிட்டு கடைக்காரர் பணம் கேட்டால் காசு கொடுக்காமல் அவர்களை தாக்குவார்கள்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலையாக உள்ளது. இந்தியாவிலேயே சட்டஒழுங்கில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கட்டணம் இல்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். நிலம் மற்றும் வீடு இல்லாத விவசாய தொழிலாளிகளுக்கு அரசே நிலம் வாங்கி வீடுகட்டி கொடுக்கும்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. எனவே வருகின்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.