சென்னை: சென்னையில் 220 தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்றும், அதில் 120 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு வருவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்  தெரிவித்து உள்ளார்.

சென்னையில் 500 தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், 75 இடங்களில் மழைநீர்வெளியேற்றம் செய்யப்பட்டு  வருகிறது. நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக, முக்கிய வியாபாரப் பகுதியான   தி.நகர் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளது. மேலும்,, கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை கமிஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது. கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது.

வெள்ளம் சூழ்ந்துள்ள தெருக்களில் மழை தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். இதை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் போர்கால அடிப்படையில் ஈடுபட்டு வருவதாகவும்,   850 இடங்களில் மின் மோட்டார் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதனை இயக்குவதற்கும் ஊழியர்கள் உஷாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  கடந்த காலங்களில் வெள்ளம் சூழாத இடங்களில் கூட இந்த ஆண்டு மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் கால்வாய்கள் நிரம்பி செல்வதால் தண்ணீரை உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறியவர்,  தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீரை வெளியேற்றுவது சவாலாக உள்ளது என்று கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சென்னையில் 220 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, அதில் 34 இடங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 127 இடங்களில் வெள்ளநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது என்றார்.

 நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேங்கி உள்ள நீரை இன்றோ, அல்லது நாளையோ முழுமையாக அகற்றி விடுவோம் . தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. த

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 2205 குடிசைகள், 273 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. நேற்று மழை, வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மழை, வெள்ளத்தில் சிக்கி 244 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மழை வெள்ளத்தை எதிர்கொள்ள காஞ்சி புரம், செங்கல்பட்டில் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்  கூறினார்.