சென்னை

சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருவதால், சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. சென்ற வருடம் அதிக மழை பெய்தும் 2015ம் ஆண்டை போல ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது.

தற்போது சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 13.22 டி.எம்.சி ஆக இருக்கும் நிலையில், தற்போது 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 7.1 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இது 1.4 டி.எம்.சி. தண்ணீர் குறைவாகும்.

மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. எனவே வரும் காலங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இது குறித்து,

“தற்போது சென்னையைப் பொறுத்தவரை குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த பருவமழை வரை தேவையான குடிநீர் இருப்பு உள்ளதால் அனைத்துப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது” 

எனத் தெரிவித்துள்ளனர்.