சென்னை:

மிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியோ,  தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என்று ஆணவமாக கூறி உள்ளார். அமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடு கிறது. தலைநகர் சென்னையில் குடிக்ககூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். லாரிகள் மூலம் பெறும் தண்ணீரும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பல தனியார் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றி அறிவுறுத்தி வருகின்றனர். அதுபோல, தேவையான தண்ணீர் கிடைக்காததால், உணவங்கள் தங்களது சேவை நேரத்தை குறைக்கப்போவதாக அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், தண்ணீர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பதெல்லாம் வதந்தி என்றவர், தண்ணீர் பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் வதந்தி என தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தட்டுபாட்டை போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளாட்சித்துறை அதுகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், தண்ணீர் பிரச்சனையை மானப்பபிரச்சனையாக கருதி அனைத்து அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  ஐ.டி.ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய சொல்வது ஏற்கனவே ஐ.டி.நிறுவனங்களில் உள்ள நடைமுறை என்றும், அதற்கும் தண்ணீருக்கும் சம்பந்தம் இல்லை  என்றவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் நீர் சேமிப்பை வலியுறுத்தும் விதமாக, கழிவுநீரை மறுசுழற்சி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருவதாகவும் கூறினார்.

இதைவிட பல கடினமான காலங்களில் எல்லாம் கூட உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டு மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்,மக்களுடைய புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எந்த அதிகாரியாக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.