சென்னை: தமிழக முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு உழவர்களுக்கு பயனளிக்காது,   ஏமாற்றத்தை அளித்துள்ளது.  இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் இன்றைய முதலமைச்சர்  விஜய், சிறுகுறு விவசாயிகளுக்கு 100% சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும், பெரு விவசாயிகளுக்கு 50% சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.

இதன் மீது நம்பிக்கை வைத்து விவசாயிகள் வாக்களித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை மத்திய அரசு தடுத்து விட்டதால் எங்களால் அறிவிக்க இயலாது என்று கைவிரித்ததால் திமுகவுக்கு எதிராக த.வெ.கவிற்கு ஆதரவாக விவசாயிகள் வாக்களித்துள்ளனர

புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் தன் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி, நிதி சுமையை காரணம் காட்டி, விவசாயிகளுக்கு பயனளிக்காத கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

இது மாதிரியான அறிவிப்புகள் கடன் சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மாநில அரசுகள் தனது நிதியிலிருந்து செயல்படுத்தும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதலமைச்சர் விஜய் உணர வேண்டும்.  கடந்த காலங்களைப் பின்பற்றி  கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைத்திட வேண்டும். நடப்பாண்டுக்காண புதிய கடன்   வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். அதுவரையிலும் தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து மறுபரிசீலினை செய்ய தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

[youtube-feed feed=1]