சிட்லபாக்கம் ஏரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமித்தை அகற்றி, அதை சீரமைக்க கோரி கடந்த 2019ம் அண்டு அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, சிட்லப்பாக்கம் பகுதி பொதுப்பணித்துறை எக்சிகியூடிவ் ஆபிசர் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சிட்லபாக்கம் இஓ அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையை படித்து பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் கண்டனம் தெரிவித்ததுடன், சிட்லப்பாக்கம் ஏரியின் புகைப்படங்களை, அதிகாரி நேரில் வந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன், தாம்பரம் நகராட்சி ஆணையர் கழிவுநீர் குறித்தும் தாசில்தார் ஆக்கிரமிப்பு அகற்றல் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மனுதாரரான அறப்போர் இயக்கம் சிட்லபாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை 2019ம் ஆண்டு அக்டோபர் 16ந்தேதிககு ஒத்தி வைத்தது.
இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், பின்னர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, தரப்பில், கூடுதல்அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ”நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதி பாதுகாப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றார்.
மேலும், சிட்லபாக்கம் ஏரி, அதைச்சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அரசு நிறுவன கட்டடங்கள், அலுவலக கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டிருப்பதாகவும், அதை விரைந்து முடிப்பதற்கான அவகாசத்தை தெரிவிப்பதாக தெரிவித்ததுடன, சட்ட நடைமுறையை பின்பற்றி, தனி நபர் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செயல் திட்டத்தையும்தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, சிட்லபாக்கம் ஏரியின் முழு அளவு; அதை சுற்றியுள்ள நிலம்; அதில் உள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள்; அகற்றப்பட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை, வரைபடத்துடன், அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.
இதையடுத்து, தற்போது தமிழக பதிவுத்துறை அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களும் அதிரடியாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு புறம்போக்கு நிலங்களை எக்காரணம் கொண்டும் ஆவணப்பதிவு மேற்கொள்ள கூடாது. இதை மீறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பதிவுத்துறை சுற்றறிக்கை அறிவித்து உள்ளது.
சிட்லப்பாக்கம் ஏரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை மீட்க கோரி அறப்போர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்போது இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.