மக்கள் வரிப்பணம் வீண்: திமுக ஆட்சியின் இலவச டிவிக்கள் தீயில் எரிந்து நாசம்!

சென்னை,

டந்த திமுக ஆட்சியின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட  இலவச டிவி, முடக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட டிவி பெட்டிகள் எரிந்து நாசமானது.

இதைக்கண்ட பொதுமக்கள், தங்களின் வரிப்பணம் அநியாயமாக எரிந்து வீணாகி போகிறதே என்று புலம்பி சென்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் இலவச டிவி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. அதையடுத்து, பொதுமக்களுக்கு இலவச கலர் டிவியை வழங்கி வந்தது.

அதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. அதை யடுத்து, பொதுமக்களுக்கு வழங்காமல் நிலுவையில்  இருந்த டிவி  பெட்டிகளை அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலா பல மாவட்டங்களில் டிவி பெட்டிகள் இன்னும் குடோனில் குப்பையாக போடப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில் ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த டிவி குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால், 1000க்கும் மேற்பட்ட அரசு தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

டிவி பெட்டிகள் எரிவதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். எங்களின் வரிப்பணம் அநியாயமாக எரிந்து நாசமாகிறதே என்று புலம்பினர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 1000க்கும் மேற்பட்ட டிவி பெட்டிகள் ஒருவருக்கும் பயன்படாமல் எரிந்து சாம்பலானது.

இனிமேலாவது பதுக்கி மற்றும் முடக்கி வைக்கப்பட்டுள்ள அரசின்  விலையில்லா பொருட்களை உடனே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Waste of taxpayers' money: Morethan 1000 colore TVs burned in the fire!