சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும்,  ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறுமுகசாமியின் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க சசிகலா அனுமதிக்கவில்லை என்பது உள்பட பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை சம்பந்தமாக, பேரவையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் அமளி காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தது,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலாவின் உறவினரான டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மற்றும் சசிகலா ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு அவர்களிடம் துறை ரீதியிலான  விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

 • செப்டம்பர் 22ந்தேதி இரவு அவர் போயஸ் கார்டனில் இருந்து அப்போலோவுக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப் பட்டது, போயஸ் கார்டனில் நடந்தது என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன.
 • ஜெயலலிதா வீட்டில் இருந்து, சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்த திலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை.
 • அப்போலோ மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலா உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. 
 • ஜெயலலிதா சிகிச்சையில், இருந்தபோது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றி உள்ளனர்.
 • எய்ம்ஸ் மருத்துவக் குழு 5முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
 • அப்போலோவில் சிகிச்சை பெற்ற ஜெ.வுக்கு, அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா,  இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை,
 • ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என சிங்கப்பூர் மருத்துவர் டாக்டர், டாக்டர் ரிச்சர்ட் பீலே பரிந்துரைத்தார். ஆனால், அதை செய்ய விடாமல் சசிகலா தடுத்துள்ளார்,
 • இங்கிலாந்து மருத் துவரின் வாய்வழி கருத்தை ஏற்று, இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் முதல்வரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.
 • சசிகலா – ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என்று கூறியுள்ளது.
 • அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் செல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங் களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை. இது ஒரு முக்கியஸ் தரால செய்யப்பட்ட மாபெரும் குற்றம். அப்போதைய முதல்வர் உயிர் தொடர்பானது என்பதால் அதன் விளைவு களை நிச்சயம் பெறுவார்.எ னவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 • ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை.
 • ஜெயலலிதாவுக்கு தொடக்கத்திலிருந்தே, இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை தொடர்பாக மருத்துவ மனையால் வழங்கப்பட்ட சிகிச்சையைப் பற்றி ஆணையத்திற்கு மிகுந்த சந்தேகம் உள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது.
 • இஎஸ்சி வழிகாட்டுதல்களின்படி ஒரு நோயாளிக்கு 10 மி.மீ.-க்கு மேல் வெஜிடேசன் இருப்பது கண்டறியப்பட்டால், அது குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்து மூலம் கரைக்கப்படாவிட்டால் அதற்கு அறுவை சிகிச்சையே மாற்று தீர்வாகும். அத்தகைய நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் அறுவை சிகிச்சை நிபுணரே குழுவின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
 • மேற்படி சாட்சிங்களிலிருந்து, வெஜிடேசன் 14 மி.மீக்கு மேல் உள்ளது என்பது தெளிவாக உள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கும் மேலாக மருத்துகள் அளிக்கப்பட்ட போதிலும், அது குணமாகவில்லை என்றும், நுரையீரலில் திரவ சேகரிப்பு அப்படியே இருந்தது என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
 • மருத்துவ நெறிமுறைகளின்படி அப்போலோ மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்து வெஜிடேசனை அகற்றி, நிலையான பெர்ஃபொரேசனை மூடியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் இதை செய்யவில்லை. இதை செய்து இருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று இந்த ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மறைந்த ஜெயலலிதாவின்  மரணத்தில் முக்கிய திருப்பமாக 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் இருக்கலாம் என்று கூறியுள்ள நிலையில்,  ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா இறந்த நாள் நேரம் குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. சாட்சியங்கள் ஜெயலலிதா இறந்த நேரம் 4-ம் தேதி மதியம் 3.30 என கூறியுள்ளன. ஆனால் மருத்துவமனை வெளியிட்ட தகவலின்படி, ஜெயலலிதா 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணித்ததாக தெரிகிறது.  ஆனால், மறைந்த ஜெயலலிதாவின் வாரிசாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள, அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக், ஜெயலலிதா மறைந்த முதலாண்டு நினைவுநாளன்று கொடுத்த திதியானது டிசம்பர் 4ந்தேதி என்பது தெரிய வந்துள்ளது. அதற்கான ஆதாரத்தையும் ஆணையம் தனது அறிக்கையுடன் இணைத்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குபிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தயார் நிலையில் இருந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றது தற்செயலானது அல்ல என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தையும் பன்னீர்செல்வம் முழுமையாக அறிந்திருந்தார். பதவி இழந்ததால்தான் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கோரியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு. இவர்கள் மீது ஆறுமுக சாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது தெரியவந்துள்ளது.

561 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின் இறுதியில் “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய தெளிவுரையும், “காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா” என்ற திருக்குறளுக்கு டாக்டர் மு.வரதராசன் எழுதியை தெளிவுரையும் மேற்கோள் காட்டப்பட்டு, அறிக்கையை நிறைவு செய்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

ஆறுமுகசாமி ஆணையத்தின் இந்த அறிக்கை, அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில், சசிகலா மற்றும் ஓபிஎஸ்-க்கும் தொடர்பு உள்ளது ஆணைய அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கைமீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரிய வரும்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் முழு அறிக்கையை பார்க்க இந்த இணைப்பில் உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யுங்கள்..

Justice Arumugaswamy Report Tamil