சென்னை; 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.

இதையடுத்து,  2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில்,  3-வது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையில் 45.8 கி.மீ நீளத்திற்கும், 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும், 5-வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47.0 கி.மீ நீளத்திற்கும் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட நீட்டிப்பு திட்டத்தில் 3-வது வழித்தடத்தில் கேளம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும், சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை யிலும், 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரையிலும், 5-வது வழித்தடத்தில் திருமங்கலம் முதல் ஆவடி வரையிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளின் அடுத்தக்கட்டமாக  சுரங்கம் தோண்டும் பணியை முதலமைச்சர் மு.கஸ்டாலின் கடந்த வாரம் மாதவரத்தில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில்  தொடங்கி வைத்தார். இந்த பணிகள்  அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 128  ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இவற்றில் 12 ரயில் நிலையங்களை தேர்வு செய்து ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. அதுபோல,  2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்த இடங்களில் இதுபோன்ற போக்குவரத்து முனையங் களை அமைக்கலாம் என்று ஆய்வு நடத்தப்பட்டு 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.