டில்லி:

மெரிக்கா – ஈரான் ,இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், ஈரானிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரான் படையை கருப்பு பட்டியலில் சேர்த்து,  அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன. இதன் காரணமாக இரு நாடுகளும் முறைத்துக்கொண்டு உள்ளன.  இந்த நிலையில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான்தான் எனக்கூறி மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து எங்கள் நாட்டின் ஹோர்மஸ்கான் வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக ஈரான்மீது போர் தொடுங்கக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார், பின்னர் கடைசி நிமிடத்தில் போர் உத்தரவை திரும்ப பெற்றார்.

ஆனால்,  எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் கூட அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் கடுமையாக எச்சரித்துள்ளார். இதன் காரணமாக  மத்திய ஆசிய கிழக்கு பகுதியிலும், வளைகுடா பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்திய விமானச்சேவை நிறுவனங்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளை தவிர்த்து விட்டு, மாற்று பாதையில் விமானச்சேவை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.