டெல்லி: உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா தயராகி வருவதால், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் செல்வதை  இந்தியர்கள்  தவிர்க்க வேண்டும் என்றும் உக்ரைன் படித்துவரும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனே வெளியேறவும் அங்குள்ள இந்திய தூதரகம்  அறிவுறுத்தி உள்ளது.

உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது நாளை (பிப்ரவரி 16ந்தேதி)  ரஷ்யா தாக்குதலை தொடங்கும் என பரவலாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் எல்லையில் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு, போர் பயிற்சிகளும் நடத்தி வருகின்றன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், குண்டு போடும் ஜெட்கள் போன்றவற்றையும் நிலை நிறுத்தியுள்ளதாக உலக நாடுகள் கூறி வருகின்றனர்.. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைனில் ஊடுருவலாம் என தெரிகிறது. அதுபோல,  போரில் வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சையளிக்கும் நோக்கில் மருத்துவ முகாம்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், ஐரோப்பிய கூட்டமைப்பான நேட்டோவைச் சேர்ந்த படைகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்தியாஉள்பட உலகின்  பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களையும் தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்து வருகின்றனர்.

இதையடுத்து, அங்கு தங்கியிருக்கும்  இந்தியர்கள், மாணர்வர்கள்  அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வரும் நிலையில், அவர்களை வெளியேறும்படியும்,  இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என்றும் உக்ரைனில் உள்ள  இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.