பாட்டியாலா: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன் பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை கேளுங்கள் என்று கூறினார்.

117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே கடந்த  கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ப சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியாக 20 இடங்களில் வென்ற ஆம்ஆத்மி இடம்பெற்றது. அகாலிதளம் 15 இடங்களையும் பாஜக 3 இடங்களையும்,  லோக் இன்சாப் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றின.

தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள  முயற்சி எடுத்து வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் தலைமையிலான கூட்டணி முயற்சித்து வருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ், பாஜகவுக்கு போட்டியாக ஆம்ஆத்மி கட்சியும் களத்தில் தீவிரமாக களமிறங்கி உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பஞ்சாபில் முகாமிட்டு ஆளுக்கு ஒரு பகுதியில் வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, பாட்டியாலா மாவட்டம் ராஜ்பூராவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, “எப்போதும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து தான் நான் வளர்க்கப்பட்டேன். அதனால், பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். பொய்யான வாக்குறுதிகளை நீங்கள் (பொதுமக்கள்) கேட்க விரும்பினால், மோடி ஜி, பாதல் ஜி மற்றும் கெஜ்ரிவால் ஜி சொல்வதைக் கேளுங்கள்” என கூறினார்.

மேலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மத்திய அரசை நான்  எச்சரித்தேன், ஆனால் அவர்கள் என் கருத்தை பொருட்படுத்தவில்லை என்று மத்திய அரசை குற்றம் சாட்டியதுடன், ‘மொஹல்லா கிளினிக்’, காங்கிரஸ் ஆட்சியில் ஷீலா தீக்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது, ஆனால்,  ஆம் ஆத்மி கட்சியினர், தாங்கள் தான் முதன்முதலாக  ‘மொஹல்லா கிளினிக்குகளை’ தொடங்கியதாக கூறுகின்றனர் என்று சீறியவர்,  பஞ்சாப் மாநிலத்தை திறம்பட நிர்வகிப்பதில் காங்கிரஸ் கட்சி கைதேர்ந்தது என்றார்.

பஞ்சாப் இளைஞர்கள், புதிய கட்சிகளுக்கு ஆட்சிப் பொறுப்பை கொடுத்து பரிசோதனையில் ஈடுபடுவதை முயற்சிக்க மாட்டார்கள். என்று நம்புவதாக கூறிய ராகுல் காந்தி, பஞ்சாபில் மீண்டும் ஆட்சி அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வாறு பேசினார்.

பஞ்சாப் மாநில தேர்தலில், முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின்  ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  ‘சிரோன்மனி அகாலி தளம்’ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக களம் காணுகிறது. இந்த கூட்டணி ஆளும் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிய முனைப்பு காட்டி வருகிறது. மறுமுனையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.