இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்கார்பியோ N மாடல் SUV யை ஜூன் 27 அன்று அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம்.

இதன் முன்பதிவு ஜூலை 30 ம் தேதி துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என ஐந்து வேரியண்ட்களில் வர இருக்கும் இந்த கார் டீசல் மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

11.99 லட்ச ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 19.49 லட்ச ரூபாய் வரை வேரியண்ட் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் 2002 ம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஸ்கார்பியோ SUV தனது போட்டி நிறுவனங்களின் SUV க்களை பின்னுக்குத்தள்ளி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானதுடன் விற்பனையிலும் சாதித்தது.

இதனை மனதில் வைத்து இந்த புதிய ஸ்கார்பியோ N மாடலை முன்பதிவு செய்ய காத்திருப்பவர்களுக்கு இதற்கான டெலிவரி குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுதும் கார் மற்றும் பாட்டரி உற்பத்தி மந்தமடைந்துள்ள நிலையில் கார்களுக்கான சிப் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இதே மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 கார்களை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அதனை டெலிவரி செய்ய 22 மாதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தயாரிப்பில் உள்ள மாடலின் கார்களுக்கே இந்த நிலைமை இருக்கும்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஸ்கார்பியோ N மாடல் எப்பொழுது கிடைக்கும் என்று இப்பொழுதே கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இதற்கு முன் ஆண்டுக்கு 50000 ஸ்கார்பியோ SUV க்களை தயாரித்து வந்த நிலையில், ஜூலை 30 ல் ஸ்கார்பியோ N மாடலுக்கான முன்பதிவு துவங்கும் போது 25000 கார்களை தங்கள் கையிருப்பில் வைத்திருக்க மஹிந்திரா நிறுவனம் முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.