தமிழக சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணை தலைவர் அண்ணாமலை, தி.மு.க. வேட்பாளர் மொஞ்சனூர் ஆர். இளங்கோ-விடம் தோற்றுப்போனார்.

177114 வாக்குகள் பதிவான நிலையில், இளங்கோ பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 93369 (52.72%) மீதமுள்ள 83745 வாக்குகளில் அண்ணாமலை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 68553, மூன்றாவதாக நாம் தமிழர் கட்சிக்கு 7188 வாக்குகளும், அ.ம.மு.க. வுக்கு 1599 வாக்குகளும், ம.நீ.ம. 1382 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சரவணன் 1236 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

போட்டியிட்ட 40 வேட்பாளர்களில் எஞ்சிய 34 பேரும் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளே பெற்றனர். நோட்டாவுக்கு 869 வாக்குகள் கிடைத்திருந்தது.

24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் தனது தோல்விக்கான காரணம் குறித்து இணையதளத்தில் நடந்த கலந்துரையாடலில் கூறியிருந்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தோல்வி குறித்து பேசிய அண்ணாமலை, முதல் பத்து நாட்கள் தாமரை சின்னத்தை வாக்காளர்கள் மனதில் பதிய வைக்கவே சிரமப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

https://twitter.com/dv2_21/status/1393620188772278273

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலில் இருக்கும் சின்னம் தான் தாமரை என்று கூறியபோதும், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்தது மூன்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த இயந்திரத்தில் முதல் சின்னம் என்று தெரியாமல் வேறு வேறு இயந்திரங்களில் இருந்த முதல் பட்டனை வாக்காளர்கள் அழுத்தியதாகவும் கூறினார்.

அதனால் மற்ற இயந்திரங்களில் இருந்த முதல் வேட்பாளருக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க. வுக்கு வந்திருக்க வேண்டிய வாக்குகள் என்றும் அப்படி விழுந்திருந்தால் தான் வென்றிருப்பேன் என்றும் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.

பதிவான வாக்குகளில் நோட்டா உட்பட மற்ற அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் தி.மு.க. வேட்பாளர் இளங்கோவுக்கு 9624 வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும் நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.