வாக்காளர் பட்டியல்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Must read

சென்னை:

மிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.2019 அன்று  வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைன் மூலமே திருத்திக்கொள்ளும் வகையில் மொபைல் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், புகைப்பட வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் புதிய நடைமுறையை உருவாக்கி உள்ளது.

இந்தத் திட்டம் கடந்த 1.9.2019 அன்று தொடங்கப்பட்டு 30.9.2019 வரை நடைபெற உள்ளது. இக்காலக்கட்டத்தில் வழங்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர், 15.10.2019 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் சரிபார்த்தல் திட்டப் பணியில், வாக்காளர் உதவி தொலைபேசி எண். 1950, கைபேசி செயலி, தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல், பொது சேவை மையங்கள், வாக்காளர் உதவி மையங்கள் ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்கள் விபரங்களை திருத்தம் செய்வதற்கும், சரிபார்ப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த முறையில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் போது, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை நேரடியாக வாக்குச் சாவடி அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் அலுவலர்களிடம் மனுக்களை வழங்கினால், பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிகளில் இருந்து வழங்கப்பட்ட பிறந்த தேதிக்கான சான்றிதழ், பிறந்த தேதி குறிப்பிடப் பட்டுள்ள 10-ஆம் வகுப்பு, 8 அல்லது 5-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், வங்கிக் கணக்குப் புத்தகம், கிசான் புத்தகம், அஞ்சலக கணக்குப் புத்தகம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் நகலை வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்கள், அரசு கேபிள் டிவி-யின் இ-சேவை மையங்கள், அரசு கேபிள் டிவியின் கூடுதல் மையங்கள், வாக்காளர் உதவி மையங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அதிகாரிகள் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் முதலானவற்றில், வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள் தாங்களே, தேர்தல் ஆணையத்தின் சூ.ஏ.ளு.ஞ. போர்ட்டல் மற்றும் கைபேசி செயலி மூலம், பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

அந்த வகையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களும்; மாவட்டம் / ஒன்றியம் / நகரம் / பேரூராட்சி / பகுதி / ஊராட்சி / கிளை / வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து நிர்வாகிகளும், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக, கழகத்தின் சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும்தனிக் கவனம் செலுத்தி, 30.9.2019 வரை நடைபெற உள்ள வாக்காளர் சரிபார்த்தல் பணிகளில், ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது சம்பந்தமாக, கழக நிர்வாகிகள் அனைவரும் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலம் தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு ஓபிஎஸ்,ஈபிஎஸ் கையெழுத்திட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article