சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் இராமசுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2016-ல் இருந்து அதிமுக ஆட்சியால் ஒத்திவைக்கப்பட்டு வந்த உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துவிட்ட நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஓராண்டுகளை கடந்தும் நடத்தப்படாமல் இருந்து வந்தது.  கொரோனா தொற்று, வார்டு பிரிப்பு என பல்வேறு இழுபறிகளை கடந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 19ந்தேதி)  நடைபெறுகிறது.

அதன்படி,  சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு 57,600 க்கும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 2கோடியே 79லட்சத்து 56ஆயிரம் பேர்  வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர்.

இந்த தேர்தலில் 218 பதவிகளுக்கு ஏற்கனவே, போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8ஆவது வார்டில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர காஞ்சிபுரம் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தொடர்புடைய வார்டுகளில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், திமுககாங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.