கரூர்: பணப்பட்டுவாடா புகாரின் பேரில், கரூரில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர், 15 பேர் கொண்ட குழுக்களாக முகாமிட்டுள்ளதால், சோதனை நடைபெறும் இடங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில்  வருமான வரித்துறை செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தேர்தல்  வரும் 23ந்தி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வாக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, அங்கு கடந்த ஆறு நாட்களாக வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களைக் குறிவைத்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே திமுக வேட்பாளர் தியாகராஜன் மற்றும் அவருக்குத் தொடர்புடைய ஏற்றுமதி நிறுவனங்களில் ஐந்து நாட்களாகச் சோதனைகள் நடந்த நிலையில், இன்று அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் மேலும் பல இடங்களில் தங்களது சோதனையைத் தொடங்கினர்:

மேலும்,  செந்தில் பாலாஜியின் நண்பர்களான ‘கொங்கு மெஸ்’ மற்றும் ‘சக்தி மெஸ்’ ஆகிய உணவகங்களின் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் நுழைந்து சோதனையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ‘வி.ஆர்.ஜி கிரானைட்ஸ்’ நிறுவனத்தில் மூன்று நாட்களாகத் தீவிர சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது செந்தில் பாலாஜியின் தொழில் ரீதியான நண்பர்களை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை திரும்பியுள்ளது.

வாக்குப்பதிவிற்கு இன்னும் மிகச்சில நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை கரூரில் அரசியல் சலசலப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சோதனைகளின் முடிவில் எவ்வளவு ஆவணங்கள் அல்லது ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]