வ.உ.சி பிறந்த நாள்-வழக்கறிஞர் தினம்: பரிசீலிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு!

Must read

சென்னை:
சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல், வழக்கறிஞருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட மத்திய, மாநில அரசுக்கள் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
voc1
சென்னை  உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் செல்லையா என்பவர் தொடர்ந்த  பொதுநல  வழக்கில் கூறியிருப்பதாவது:
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகவும், ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாகவும், தயான்சந்தின் பிறந்த நாளை விளையாட்டு தினமாகவும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதுபோல, சுதந்திரத்துக்காக போராடிய வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வழக்கறிஞர்கள் தினமாக கொண்டாடவேண்டும்.  நாட்டின் விடுதலைக்காக போராடிய சிதம்பரனார், 1908-ம் ஆண்டு சிறைக்கு செல்லும்போது, ஜவஹர்லால் நேருவுக்கு வெறும் 19 வயதுதான்.
மகாத்மா காந்தி அரசியலுக்கு வரவேயில்லை. ராஜாஜி பொது வாழ்க்கைக்குள் நுழையவே இல்லை. இந்த தலைவர்களுக்கு எல்லாம் முன்னோடியான தலைவராக சிதம்பரனார் திகழ்ந்தார்.
ஆங்கிலேயர் அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தினார். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சமூக சீர்த்திருத்தவாதி மற்றும் வழக்கறிஞரான வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் செப்டம்பர் 5-ந் தேதி வருகிறது.
இந்த நாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என கூறி இருந்தார்.
இந்த வழக்க்கு  தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கவுல்,  இந்த நாட்டிற்காக பல தனிப்பட்ட மனிதர்கள், தலைவர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். அவ்வாறு தியாகம் செய்த தலைவர்களை கண்டிப்பாக அங்கீகரித்து கவுரவிக்கவேண்டும். ஆனால், எப்படி அங்கீகரித்து கவுரவிக்கவேண்டும்? என்ற முடிவினை அரசுதான் எடுக்க  வேண்டும். அரசு முடிவு எடுத்து அறிவிக்க வேண்டிய விஷயத்தில் இந்த நீதிமன்றம் தலையிட முடியாது.
அதேநேரம், இதுவரை மனுதாரர் தன் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு  மனு அனுப்பவில்லை. அதனால், மனுதாரர் தன் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் கோரிக்கையை மத்திய, மாநில அரசு பரிசீலிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

More articles

Latest article