சிவகங்கை:

கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தை பார்வையிட விடுமுறை நாட்களில் மக்கள் அதிக அளவில் வரும் நிலையில், பார்வையிடும் நேரம், பார்வையிடும்  பகுதி தொடர்பாக பார்வையாளர்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ல் அகழாய்வு மேற் கொண்டது. அதைத் தொடர்ந்து 2 மற்றும் 3-வது கட்ட அகழாய்வை நடத்தியது. இந்த மூன்று அகழாய்வு மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பிறகு, நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற் கொண்டதில் 5,820 தொல்பொருட் கள் கண்டெடுக்கப்பட்டன.  கீழடியில் தற்போது  6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான  4வது கட்ட அகழாய்வு முடிவுகளில், கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்களி டையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விடுமுறை தினங்களில் கீழடியை காண மாநிலம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து,  பார்வையாளர்களின் நடமாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பார்வையிட முடியும்.

மேலும்,  தொல்பொருள் ஆய்வுக்காக தோண்டிய 52 குழிகளில் 30 மட்டுமே சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடியும்.

சுற்றுலாப் பயணிகள் அகழ்வாராய்ச்சிக்குத் தடையாக இருந்து வருவதாலும்,   சிலர் அகழாய்வு குழிகளில் குதித்து சேதம் ஏற்படுத்துவதாகவும்  எழுந்த புகாரைத் தொடர்ந்து கீழடியை காண வருபவர்களுக்கு சிவகங்கை காவல்துறையினர் சில  கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.