தேனி
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோரின் ஜாமின் மனு மீதான விசாரணையை அக்டோபர் 10ந்தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நீட் ஆள்மாறாட்டம் காணமாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4 பேர் தரப்பில் ஜாமின் கேட்டு தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதே வேளையில், சிபிசிஐடி தரப்பில், அரசு உதவி வக்கீல் நிர்மலாதேவி சார்பில் சேலம் சிறையில் உள்ள மாணவர் இர்ஃபானை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரூபணா, மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தை ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணயை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதேபோல், மாணவர் இர்ஃபானை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் இருந்து வழக்கு குறித்த ஆவணம் கிடைத்த பிறகே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர்களான பிரவீன் மற்றும் ராகுல் ஆகிய 2 மாணவர்களும் வெவ்வேறு தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியதும், அவர்களும் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டனர்.
பிரவீனும் ராகுலும் சென்னையில் இரண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்ற னர். இவர்களுக்கு உதவியதாக கூறப்படும் கேரளாவை சேர்ந்த புரோக்கர்களான ரஷீத், ரபியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்களில் ரஷீத் பெங்களூருக்கு தப்பியோடியதாகவும், ரபி, வட இந்தியாவுக்கு தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, அதிகாரிகள் துணையில்லாமல் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் ஆள்மாறாட்டத்தில் எத்தனை மாணவர்கள் ஈடுபட்டனர்? எவ்வளவு பணம் கைமாறியது? ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் யார் யார்? என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அக்.,15க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா முதன்முதலில் கடந்த மாதம் சிக்கினார். அவரும் அவருடைய தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இதற்குப் பின்னணியில் ஒரு கும்பலே செயல்பட்டது அம்மபலமானது. இந்த அடிப்படையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்தம் தந்தையர் கைது செய்யப்பட்டனர். மாணவர் இர்ஃபான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருடைய தந்தை முகமது சபியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.