விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்.

எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயதரிசனம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 46 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த, நடுநாட்டு தலங்களில் 9 வது தலமாகவும் தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 220 வது தலமாகவும் விளங்குகிறது இந்த விருத்தகிரீஸ்வரர் ஆலயம்.

“விருத்த’ என்றால் “முதுமை’ என்றும் “அசலம்’ என்றால் “மலை’ என்றும் பொருள்படும். எனவே “விருத்தாசலம்’ என்றால் “பழயமலை’ என்பது பொருள். தேவார திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.இந்த விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில். 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் 5 எண்ணிக்கையில் இருப்பது கோவிலின் சிறப்பம்சமாகும்.

காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் “விருத்த காசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் “காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி’ என்ற பழமொழி கூட உண்டு. முருகன் சிவனைப் பூஜித்த தலம் இது.

இறைவனது அருளால் சுந்தரர் பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளைக் கள்வருக்குப் பயந்து இந்நதி(மணிமுத்தா)யில்போடப் பெற்று பின்னர் திருவாரூர் குளத்தில் கிடைக்கப் பெற்றாராம். விபச்சித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் முதுகுன்றத் திருக்கோயில் ஆகும். முத்தா நதியில் பொன் : ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார்.

விருத்தாசலத்தில், இந்த தலத்திற்கு வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்குப் பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டு விட்டுடார் சுந்தரர். பிறகு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படை யாகக் கொண்டே, “ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்’ என்ற பழமொழி தோன்றியது.

இறைவன் தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்தது. இதை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காகத் தும்பிக்கை நாயகனைச் சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். அதனைத் திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவேதான் இத்தலத்தில் உள் சுற்றுப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு அருள்பாலித்து வருகிறார்.