டில்லி

த்திய அரசு கடந்த 2018 ஆம் வருடம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 2 -3 டிரில்லியன் கேட்டதால் மோதல் ஏற்பட்டதாக வைரல் ஆசார்யா தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கீழ் இயங்கி வந்தாலும் அது ஒரு தனிப்பட்ட நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ளது.  அதன்படி தேர்தல் ஆணையத்தைப் போல் ரிசர்வ் வங்கியும் ஒரு சுயமாக இயங்கக் கூடிய நிறுவனம் ஆகும்.   ஆனால் மத்திய அரசு ரிசர்வ் வங்கி விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது.

அவ்வகையில் ரிசர்வ் வங்கியின் லாபத்தில் இருந்து அரசுக்குப் பங்கு அளிக்க வேண்டும் என ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு அதற்கா ரிசர்வ் வங்கியின் வரவு செலவுக் கணக்குகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.   அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு நிதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் வைரல் ஆசார்யா, ”கடந்த 2018 ஆம் வருடம் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 2 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரை பணம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.  இந்த பணம் அப்போது வரவிருந்த தேர்தல் செலவுகளுக்காகக் கோரப்பட்டது. 

ஆனால் இதை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்ததால் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  எனவே மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கியின் லாபத்தில் இருந்து ஒரு பங்கு மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு அதற்காகக் குழு அமைத்து அந்தக் குழு ரிசர்வ் வங்கியின் வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து வருகிறது” எனக் கூறி உள்ளார்.

அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு வரி வருமானம் அதிகரித்துள்ள போதிலும் தேர்தல் செலவுகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய ரிசர்வ் வங்கிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.