முருக பெருமானுக்கு உகந்த  விரதங்கள்…

மிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் சொல்லப்படுகின்றன.

வார விரதம்

நட்சத்திர விரதம்

திதி விரதம்

வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது ஆகும்.

நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் இருப்பதை குறிக்கும்.

திதி விரதம் என்பது சஷ்டி திதியில் மட்டும் இருப்பதாகும்.

வார விரதம்:  கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான் ஆவார். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், நிலப் பிரச்சினை இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், சீக்கிரமே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.

விரதம் இருக்கும் முறைகள்: 

செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோவிலுக்குச் சென்று வணங்கவேண்டும். பிறகு வீட்டுக்கு வந்ததும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் குடித்துவிட்டு, விரதத்தை தொடரவும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு ஏற்ற ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். மாலைப்பொழுது ஆறு  மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து நிறைவு செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது  செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து வந்தால் செவ்வாய் தோஷத்தினால் உண்டாகக்கூடிய பிரச்னைகள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

நட்சத்திர விரதம் என்றால் என்ன?: 

கார்த்திகை நட்சத்திரத்தன்று தொடங்கப்படும் விரதம் நட்சத்திர விரதம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் கொடுத்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்குபவர்களுக்கு, நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தை ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம்.

 திதி விரதம்:

வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் குளித்துவிட்டு, முருகப் பெருமானை வேண்டி, நாம் என்ன நோக்கத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அந்த நோக்கத்தினை மனதில் நினைத்துக் கொண்டு, விரதத்தைத் மேற்கொள்ள வேண்டும். அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் இருந்துவந்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் எல்ல ஐஸ்வர்யங்களையும் பெறலாம்.

குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே கூறப்படுகிறது. அதனால்தான், ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’  என்று கூறுகிறார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள் ஆகும்.

வாழ்வில் எல்ல நலமும் பெற முருகனை வேண்டி அருள் பெறுவோம்.

 
English Summary
Viradhams opt for Lord murugan