ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்: இஸ்லாம் சொல்வது என்ன?

ஸ்லாமியர்களுக்கான முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இதை ஈகைத்திருநாள் என்றும் அழைப்பது வழக்கம்.  மற்றொரு பண்டிகை  தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாள். 

ரம்ஜான் மாதத்தில்  30 நாட்கள் கடைபிடிக்கப்படும் நோன்பு மூலம்  மனிதர்களுக்கு நல்வழியை காட்டுகிறது இஸ்லாம்.

உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா…!

ஈகைத்திருநாள் என பெயர் வரக் காரணம் என்ன?

பிறர் கண்ணீர் துடைப்பதையும், பிறர்க்கு உதவுவதையும் மதக் கடமையாகவும்,  இறை வழிபாடாகவே ஆக்கியுள்ளது இஸ்லாம்.

“பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்!’ “அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்’ என்று அண்ணலார் ஓங்கி முழங்கினார்கள் என்று சொல்கிறது இஸ்லாம். இதன் காரணமாகத்தான்  ரம்ஜான் பண்டிகைக்கு ஈகைத்திருநாள் என்ற பெயரும் உருவானது.

முஸ்லிம்களுக்கான ஐந்து கடமைகளான  கலீமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவை.  இந்த கடமைகளை நிறைவேற்ற . நோன்பு உங்களுக்கு கேடயமாக இருக்கிறது என்கிறது இஸ்லாம்.

தீமைகள் பக்கம் செல்வதை தடுத்து, நன்மைகளின் பக்கம் அது வழிநடத்துவதால் அதை கேடயம் என்கிறது இஸ்லாம். உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டது போல், நோன்பு உங்களுக்கும் விதியாக்கப்பட்டுள்ளது என குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.

இதைத்தொடர்ந்து இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.

மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான்.

மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது.

ஆனால் நோன்பு கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.

ஐந்து வேளை தொழுதல், குர்ஆன் படித்து, தர்மங்கள் அதிகம் செய்வது ஆகியவற்றுக்கு ரம்ஜானில் முன்னுரிமை தரப்படுகிறது. பொய், புறம் பேசுதல், ஏமாற்றுவது என அனைத்து குற்றங்களில் இருந்தும் மனிதன் தன்னை இம்மாதத்தில் தடுத்துக்கொள்கிறான்.

நோன்பு இருக்கிறோம் என்ற பயம் அவனை ஆட்டிப்படைக்கிறது. ரம்ஜான் இல்லாத மாதங்களிலும் இந்நிலை தொடர வேண்டும் என்பதற்காகவே ஒரு வாரம், பத்து நாள் என இல்லாமல் 30 நாட்கள் அதாவது ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

‘சஹர்’ எனப்படும் காலை உணவில் இருந்து இந்த நோன்பு தொடங்குகிறது. விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாகவே நோன்பு தொடங்கிவிடும்.

சூரியன் அஸ்தமனமான பிறகு, அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர்.

நோன்பு வைக்க இயலாதவர்கள் யார் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதானவர்கள், நோய்வாய்ப் பட்ட வர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை.

வயதானவர¢கள், குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள் (வசதி உடையோர்) நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவான தொகையை தர்மமாக தரலாம். மற்றவர்கள் ரம்ஜான் மாதத்துக்கு பிறகு, தங்கள் விட்ட நோன்பை, மற்ற நாட்களில் வைக்க வேண்டும்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான். அதில் ஒன்றுதான் ‘ஜகாத்’.

இதுவும் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ள ஐந்து விஷயங்களில் ஒன்று. நம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகை ஆகியவற்றின் மீது இரண்டரை சதவீத தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

இதுதான் ஜகாத். ஜகாத் தொகையை, முதலில் பெற தகுதி வாய்ந்தவர்கள் வறுமையில் உள்ள உங்கள் உறவினர்கள்தான் என்கிறது இஸ்லாம். முதலில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பிறகு, பிற ஏழைகளுக்கு கொடுக்கலாம்.

அடுத்தது பித்ரா. ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும். பிறை பார்த்ததில் இருந்து ஈகைப்பெருநாளுக்கான தொழுகைக்கு செல்வதற்கு முன்பு ஏழைக்கு பித்ரா கொடுத்துவிட வேண்டும்.

அரிசி அல்லது கோதுமையை ஒன்றரை படி அளவுக்கு வழங்கலாம். அல்லது அதற்குரிய பணத்தை வழங்கலாம். ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் என்றால் 6 பேருக்கும் கணக்கிட்டு பித்ரா தர வேண்டும். ஜகாத், பித்ரா தவிர சதகா எனப்படும் பிற தர்மங்களையும் இம்மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பெருநாளன்று எந்த ஓர் ஏழையும் பசியோடு இருக்கக் கூடாது; உணவின்றி வாடக் கூடாது; பிஞ்சுக் குழந்தைகள், பட்டினியால் தவிக்கக் கூடாது  என்பதேயாகும்.

அதனால்தான் இந்தப் பண்டிகைக்கு ஈதுல் ஃபித்ரு- ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது. ஆம்…!ஈகைத் திருநாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்…!பசிப்பிணி போக்கும் பெருநாள்…!

ரம்ஜான் மாதத்தின்  கடைசி பத்து நாள்களில்  லைலத்துல் கத்ர் இரவு என்று அழைக்கப்படும் நாட்களில்  இறைவனை அதிகமாக வழிபடுங்கள் என்கிறார் முகமது நபி.  இம்மாதத்தின் கடைசி பத்து நாட்களில் முகமது நபி இதிகாப் இருப்பார்கள் என்கிறது இஸ்லாம்.

‘இதிகாப்’ என்பது ரம்ஜான் மாதத்தில் கடைசி  பத்து நாட்கள் மசூதியிலேயே தங்கியிருந்து வெளியிடங்க ளுக்கு செல்லாமல் இறைவனை மட்டுமே நினைத்து, பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகும். பத்து நாட்கள் இதிகாப் இருக்க இயலாதவர்கள், 5 அல்லது 3 நாட்கள்கூட இதிகாப் இருக்கலாம்.

இம்மாதம் முடிந்து, ஷவ்வால் மாதத்தின் முதல் நாள்தான் ஈத் எனப்படும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் சிறப்பு தொழுகை நடத்தி, தர்மம் செய்து, உறவினர்களை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள். 30 நாட்கள் நம்மை பக்குவப்படுத்திச் சென்ற நல்ல குணங்களை அதன் பின்பும் நினைவில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.

இதுதான் ரம்ஜான் நமக்கு காட்டும் நல்வழி.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ramzan fasting begins today: what is Islam saying?, ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்: இஸ்லாம் சொல்வது என்ன?
-=-