சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்ட ஆளுநருக்கு எதிராக உரிமைமீறல் தீர்மானம் கொண்டு வர, பேரவை தலைவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில்  சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை கடிதம் கொடுத்துள்ளார்.

நடப்பாண்டின் (2024)  முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடியது. இதில், தமிழக அரசின் சட்டப்பேரவை உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்திருப்பதும், அதற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டுவந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தன் உரையைத் தொடங்கினார் ஆளுநர். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. மேலும், உரையில் உண்மைத்தன்மை மற்றும் தார்மிக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் உரையைப் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதைத்தொடர்ந்து, அதைத்தவிர்த்து ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கமும், ஆளுநர் பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டது.

 ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டு,  ஆளுநர் பேச்சை சபாநாயகர் நீக்கிய நிலையில், அதை ஆளுநர் ரவி வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “சட்டப்பேரவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.