சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் தொடர் போராட்டம் அறிவிப்பு காரணமாக, இன்று தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள்,  சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

10அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.  வரும் 15ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளனர். தொடர்ந்து மாத இறுதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகளிடம் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உடன்  அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது, திமுக அரசுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால்,  அந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.