எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் விமல், இனியா, பாலசரவணன், முனீஷ்காந்த், ரேஷ்மா, மனோகர் மற்றும் பலர் நடிப்பில் ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில வெளியாகி உள்ளது, விலங்கு தொடர்.

ஜி வி பிரகாஷ் நடித்த புரூஸ்லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இந்த தொடரை இயக்கியுள்ளார். 7 அத்தியாயம் கொண்ட இந்த தொடர் திருச்சி அருகில் உள்ள காவல் நிலையத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது.

சப் இன்ஸ்பெக்டராக விமல், அவரது மனைவி இனியா நிறை மாத கர்பிணி. இன்ஸ்பெக்டர் மனோகர் தனது பேத்தி காது குத்து என்பதனால் ஸ்டேஷனில் இல்லை.

இந்நிலையில எம்.எல்.ஏ.வின் மச்சான் காணாமல் போக, அந்த கேஸை சீக்கிரம் முடிக்க சொல்கிறார்.

அந்த நேரத்தில் தான் காட்டு பகுதியில் ஒரு பிணம் இருப்பதாக தகவல் வருகிறது. அங்கு போலீஸ் சென்று பார்வையிடுகிறது. பிணத்தின் தலை மட்டும் மிஸ்ஸிங்.

விமல் தவிக்கிறார். மனைவி மருத்துவமனையில் அனுமதிக்க பட, இங்கு தலை தொலைந்ததற்கு பொறுப்பாகிறார். காசை கொடுத்து பிற அரசு ஊழியர்களை சமாளிக்கிறார்.

ஒருவாரத்திற்குள் தலை கிடைக்க வேண்டும் என்ற நிலை.

இதற்கிடையே ஊர்த்திருவிழா நடக்கிறது. கிடைத்த க்ளூ வைத்து திருவிழா நடக்கும் இடத்திற்கு செல்கிறது போலீஸ் டீம்.

அங்கு இன்னொரு பிணம் கிடைக்கிறது. இறந்தவனின் போனில் வேறு ஒரு சிம் போடப்பட்டதை கண்டுபிடித்து விசாரிக்க, ஸ்டேஷனில் எடுபிடி வேலை செய்பவன் பக்கம் கேஸ் திரும்புகிறது. மனைவி வேறு ஒருவனுடன் ஓடிவிட தன் மகளுடன் இருப்பவன் தான் அந்த கிச்சா.

அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் அனைத்துமே கதிகலங்க வைக்கிறது.

இறுதியில் குற்றவாளி யார் என்பதே மீதி எபிசோடுகள்.

விமல், பால சரவணன் என நமக்கு பழக்கப்பட்ட முகங்கள். முதல் அத்தியாயத்தை பார்க்கும் பொழுதே நம்மையும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒருவராக உணர வைக்கிறார் இயக்குனர்,

காவல் நிலையத்தின் பணிகள் நடக்கும் வித், ஊரில் உள்ள ஜாதி பிரச்சனை, போலீஸ் வாழ்க்கையில் எவ்வளவு அழுத்தம் என பல விஷயங்களை உணரவைக்கிறார்.

சொகுசாக வாழ நினைத்து ஆண்களின் சபலத்தை தூண்டி பணம் பறிப்பதாகட்டும், புதையல் உள்ளது என ஆசை காட்டி மக்களிடம் திருடுவது என நாம் செய்திகளில் பல முறை பார்த்த விஷயம் தான் இந்த தொடருக்கு இன்ஸபிரேஷன். அதை சுவாரஸ்யமாக, படமாக்கி இருக்கிறார்கள்.

இசை, எடிட்டிங், கலை, ஒளிப்பதிவு, நடிகர் நடிகையர் தேர்வு என அனைத்துமே சிறப்பு.

எதார்த்தம் என்ற பெயரில் அடிக்கடி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.